சின்னத்திரை சீரழிவு

29/10/2010 14:38

 

உலகமே சின்னத்திரை மயமாக இருக்கும் போது சின்னத்திரையைப் பார்க்கக் கூடாதவர்களும் உண்டா? உண்டு!!  

இரண்டு வயதிற்கும் கீழான குழந்தைகளைச் சின்னத்திரை பார்க்க விடாதீர்கள். சியாட்டிலில் ரீஜினல் மெடிகல் செண்டரில் உள்ள குழந்தைகள் மருத்துவ மனையில் ஒரு ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள் தரும் அறிவியல் டிப்ஸ் இது!

இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சின்னத்திரையைப் பார்க்கலாமா? பார்க்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமே அவர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படலாம்.ஏனெனில் சின்னத்திரை முன்னால் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவர்களுக்கு பத்து சதவிகிதம் கவனமின்மையை (Attention deficit) ஏற்படுத்துகிறது.

1345 குழந்தைகளிடம் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வில் 30 சதவிகிதம் குழந்தைகளுக்கு இந்த 'கவனமின்மை ஒழுங்கீனம்' ஏற்பட்டு விட்டது. ஆய்வுக் குழுவின் தலைவரான டாக்டர் டிமிட்ரி கிறிஸ்டாகிஸ் "குழந்தையின் மூளை பிறந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக வெகு வேகமாக வளர்ச்சி அடைகிறது" என்கிறார். டி.வி. பார்ப்பது வளர்ந்து வரும் மனதை இயற்கைக்குப் புறம்பான மட்டங்களுக்கு ஊக்கி விடும். இப்படி ஊக்கிவிடப்படும் மனங்கள் அடுத்து வரும் வருடங்களில் வாழ்வில் தான் பார்த்தவை நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது பள்ளி வாழ்க்கையிலும் ஹோம்-ஒர்க் செய்வதிலும் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.டெலிவிஷனில் 'ரேபிட் இமேஜ் சேஞ்ச்' எனப்படும் துரிதமாக சித்திரங்கள் மாறுபடுவது இந்த நிலையை மோசமாக்கும்!

எதையும் ஒருமுகப்படுத்திப் பார்க்க முடியாத நிலை, அமைதியின்மை,எதற்கெடுத்தாலும் குழப்பமுறும் தன்மை ஆகியவை ஏற்பட்டு விடும்.அமெரிக்காவில் ஒரு குழந்தை ஒரு ஆண்டில் சராசரியாக 900 மணி நேரம் பள்ளியிலும் 1023 மணி நேரம் டி.வி.பார்ப்பதிலும் தனது நேரத்தைச் செலவிடுகிறது.

குழந்தைகள் நமது நாட்டில் டி.வி.முன் அமர்வது இன்னும் அதிகம்!நாளுக்கு பார்க்க வேண்டிய டைம் லிமிட் : இரண்டு மணி நேரம மட்டுமே! இப்படி அளவோடு டி.வி.பார்ப்பது அவர்கள் வாழ்க்கைக்கு வளமூட்டும்; அறிவை அற்புதமாகப் பெருக்கும்!

குழந்தைகள் சின்னத்திரை முன் அமர்ந்து பார்ப்பதில் பெற்றோர்களுக்கு பெரிய கடமை உண்டு. எந்த நிகழ்ச்சிகளைத் தங்கள் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். வன்முறை, அடிதடி, கலாட்டா, செக்ஸ் நிறைந்த காட்சிகள் இவற்றை ஒதுக்கி விட்டு அறிவையும் சமூக அக்கறையையும் வளரச் செய்யும் நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இளம் தாய்மார்களே! கவனமாய் இருங்கள்; கண்டிப்பாய் இருங்கள்.இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை சின்னத்திரையைப் பார்க்க விடாதீர்கள்!

நன்றி : சின்னத்திரை பிப்ரவரி 2, 2007 இதழ்

Back