விழியின் ஒளி

29/10/2010 14:14

அந்த மின்னஞ்சலை முதலில் கண்டவுடன்
ஆரவாரமில்லை ! ஆனந்தமில்லை !
அமைதியாகத்தான் இருந்தது மனது !

ஒரு நொடியும் யோசிக்கவில்லை
ஒப்புக்கொண்டேன் !
ஞாயிறுகள் இனி பயனுள்ளதாக கழியட்டுமே !

சிரமம் ஏதுமில்லை - இப்படி
சில மணி நேரங்கள்
செலவிடுவதற்கு !

பள்ளிக்கு கிளம்பினேன்
படித்துக் காட்ட!
வழி தெரியாமல் திணறிய எனக்கு
விழி இல்லாதவர் காட்டினார் வழி !

நூற்றுக்கும் மேற்பட்டோர் !
பள்ளி கல்லூரி மாணவர்களை மட்டும்
எதிர்பார்த்து சென்ற எனக்கு
எதிர்பாராத ஆச்சரியமே !

பள்ளி மாணவர்கள்
கல்லூரி இளைஞர்கள்
வேலை செய்யும் மக்கள் என
பல வயதினர்கள் , பல தரபட்டவர்கள் !

வழிபாடு முடிந்து
படித்துக்காட்டல் ஆரம்பமாயின - எனக்கு
தமிழ் படிக்க தெரியும் என்பதால்
ஒருவருக்கு தமிழ் படித்துக்காட்ட பணித்தனர் !


தகுந்த இடம் அமர்ந்து
என்னை அறிமுகப்படுத்தி - அவர்
அறிமுகம் கேட்டேன்!
அதிர்ந்து போனேன்!
ஆம் ! அவர் தமிழில் எம். பில் !
பள்ளி ஆசிரியர் !
அரசாங்க தேர்வு எழுதி
பணி நியமனம் பெற்ற
அரசாங்க ஊழியர் !

எதையும் ஒருமுறை படித்துக்காட்டினால்
அப்படியே மனதில் ஏற்றுக்கொள்ளும்
ஞாபக சக்தி !

பார்வையில்லையே என்ற எண்ணமின்றி
படிக்க வேண்டும் என்ற
தன்னம்பிக்கை !!

விழி இல்லை எனினும் வாழ்க்கையை
வெளிச்சமாக்க வேண்டுமெனும்
விடாமுயற்சி !!

பார்வையற்றவர்களுக்கு படித்துக்காட்ட சென்ற நான்
படிக்க வேண்டிய பாடங்கள் பல !
இனி வாரந்தோறும் படிக்கப் போகிறேன்
அவர்களுக்காக மட்டுமல்ல
எனக்காகவும் ! 


  - இளவரசி இ

Back